கடை, உணவகங்களில் காலாவதியான உணவு பொருட்கள் பறிமுதல்

கடை, உணவகங்களில் காலாவதியான உணவு பொருட்கள் பறிமுதல்

ஊட்டி,

ஊட்டி சிறந்த சுற்றுலா தலமாக விளங்குகிறது. இங்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். அவர்கள் ஊட்டியில் உள்ள கடை மற்றும் உணவகங்களில் தான் உணவு சாப்பிட வேண்டிய நிலை உள்ளது. இந்த நிலையில் ஊட்டியில் உள்ள உணவகங்கள் மற்றும் கடைகளில் காலாவதியான உணவு பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் வந்தது.

இது குறித்து கலெக்டர் இன்னசென்ட் திவ்யா உத்தரவின் பேரில் மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி சிவக்குமார் தலைமையில் அதிகாரிகள் ஊட்டியில் உள்ள கடைகள் மற்றும் உணவகங்களில் திடீரென்று சோதனை நடத்தினர்.

அப்போது சில உணவகம் மற்றும் கடைகளில் காலாவதியான உணவு பொருட்கள் விற்பனை செய்வது தெரிய வந்தது. இதையடுத்து அந்த கடைகளில் இருந்த காலாவதியான உணவு பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்தனர்.

இது குறித்து உணவு பாதுகாப்பு அதிகாரி சிவக்குமார் கூறியதாவது:–

நீலகிரி கலெக்டர் உத்தரவின்பேரில் கடைகள் மற்றும் உணவகங்களில் அதிரடி சோதனை செய்யப் பட்டது. அப்போது அந்த கடைகளில் இருந்த காலாவதியான சாக்லெட், பிரெட், கேக், பிஸ்கட் உள்ளிட்ட உணவு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அதன் மொத்த மதிப்பு ரூ.25 ஆயிரம் ஆகும். சிறந்த சுற்றுலா தலமாக இருக்கும் ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு நல்ல தரமான உணவுகளை மட்டுமே வழங்க வேண்டும். காலாவதியான மற்றும் தரமற்ற உணவு பொருட்களை விற்பனை செய்யும் கடைக்காரர்கள் மற்றும் உணவக உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

This entry was posted in News & Events. Bookmark the permalink.