தரமற்ற உணவு பொருட்கள் விற்றால் கடும் நடவடிக்கை

ஈரோடு : ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் உணவு பாதுகாப்புத்துறை சார்பில் மாவட்ட அளவிலான இயக்க குழு கூட்டம் கலெக்டர் பிரபாகர் தலைமையில் நேற்று நடந்தது. கூட்டத்தில் கலெக்டர் பிரபாகர் பேசியதாவது:  “மாவட்டத்திலுள்ள உணவு விடுதிகள், பேக்கரி மற்றும் டீ கடைகள் அரசு மற்றும் தனியார் பள்ளி கல்லூரி கேன்டீன்கள் மற்றும் விடுதிகளில் ஆய்வு செய்யப்படும். அங்கு சுகாதாரமான உணவுப் பொருட்களை மாணவர்களுக்கு வழங்க உணவு பாதுகாப்பு அலுவலர்கள் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் உறுதிப்படுத்த வேண்டும்.
மாவட்டம் முழுவதிலும் இறைச்சி கடைகளில் ஆடு வதை செய்யப்படாமல், சுகாதாரமான முறையில் பராமரிக்கப்படும் இறைச்சி அறுவைக் கூடங்களில் மட்டுமே வதை செய்யப்படுவதையும், ஆடு, கோழி இறைச்சி கடைகள் சுகாதாரமான முறையில் பராமரிக்கப்பட்டு வருவதை சம்மந்தப்பட்ட உள்ளாட்சி நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும். இறைச்சி அறுவை கூடம் இல்லாத உள்ளாட்சி அமைப்புகள் ஆடு, கோழி, மாடு ஆகியவற்றிற்கு தனித்தனியாக இறைச்சி அறுவை கூடம் அமைக்கவும், அனுமதி இல்லாமலும், உரிமம் பெறாமலும் சாலையோரங்களில் சுகாதாரக் கேடு விளைவிக்கும் வகையில் அமைந்துள்ள கடைகளை அகற்ற சம்மந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். 
உணவு விடுதிகள் தரமான மூலப்பொருட்களைக் கொண்டு சுகாதாரமான முறையில் அஜினமோட்டோ மற்றும் செயற்கை வண்ணம் தவிர்த்து உணவு தயாரித்து பொதுமக்களுக்கு வழங்க வேண்டும். உணவு விடுதியின் சமையலறை, பொருட்கள் இருப்பு அறை மற்றும் சமையலுக்கு பயன்படுத்தும் பாத்திரங்களை சுகாதாரமான முறையில் பராமரிக்க வேண்டும். அனைத்து உணவு விடுதிகளும் மற்றும் உணவுப் பொருள் வணிகம் செய்பவர்கள் உணவு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் உரிமம் பெற்று வணிகம் செய்ய வேண்டும்.
பேக் செய்யப்பட்ட உணவுப் பொருட்களை முழுமையான லேபிள் விபரங்களுடன் விற்பனை செய்ய வேண்டும். தடை செய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்யக்கூடாது. அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப்பொருட்கள் விற்பனை செய்யப்படுவதை காவல்துறையுடன் இணைந்து கண்காணித்து அவற்றை விற்பனை செய்பவர்கள் மீது உணவுப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தரமற்ற உணவுப் பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கலெக்டர் பிரபாகர் பேசினார்.

This entry was posted in News & Events. Bookmark the permalink.