மோசடி மோட்டல்கள்… டுபாக்கூர் ஹோட்டல்கள்! – ஜூ.வி ஸ்பெஷல் ஸ்டோரி

காக்கா பிரியாணி… ஊசிப்போன வடை… புளிப்புதோசைபரிதாப பயணிகள்… போக்குவரத்து களவாணிகள்!

சர்வர்: “அண்ணனுக்கு ஒரு ஊத்தப்பத்துக்கு 50 ரூபா பில்ல போடு!”
வடிவேலு: “எனக்கு ஊத்தப்பமே வேணாம் போடா!”
சர்வர்: “கேன்சல் ஆன ஊத்தப்பத்துக்கு ஒரு 50 ரூபா சேர்த்து பில்ல போடு!”
வடிவேலு: “என்னடா… களவாணிபய ஹோட்டலா இருக்கு!”
‘குருஷேத்திரம்’ திரைப்படத்தில் இடம்பெற்ற வடிவேலுவின் காட்சியைத் தமிழக நெடுஞ்சாலைகளில் உள்ள ‘மோட்டல்கள்’ எனப்படும் டுபாக்கூர் ஹோட்டல்களில் தினந்தோறும் காணலாம்.
சமீபத்தில், மதுரையிலிருந்து சென்னைக்கு அரசு பஸ் ஒன்றில் பயணம் செய்தோம். மேலூரைத் தாண்டியதும் பெரும்பாலான பயணிகள் உறங்க ஆரம்பித்துவிட்டனர். நீண்ட நேரத்துக்குப் பிறகு, நெடுஞ்சாலையைவிட்டு இறங்கி பஸ், மெதுவாக மேடுபள்ளத்தில் ஏறி இறங்கி நின்றது. சரியாக இரவு ஒன்றரை மணி. பஸ்ஸில் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர். அந்த இடம், ஒளி வெள்ளத்தில் மிதந்தது. கானா பாட்டு காதைக் கிழித்தது.
“பத்து நிமிஷம் பஸ் நிக்கும்… பாத்ரூம் போறவங்க போயிட்டு வந்திடுங்க!” எனக் குரல் கேட்டு பலர் எழுந்தனர். பாதி பஸ் காலியானது. சிலர் அசந்து உறங்கினர். திடீரென்று ‘டமார்… டமார்’ எனப் பஸ்ஸை ஒருவர் தட்டினார். தூங்கியவர்கள் திடுக்கிட்டு எழுந்தனர். ‘‘இறங்கி டிபன் சாப்பிடுறவங்க சாப்பிடுங்க’’ என கூலாகச் சொன்னார், பஸ்ஸைத் தட்டிய நபர். திடுக்கிட்டு எழுந்தவர்களில் நாமும் அடக்கம்.
எரிச்சலுடன் பஸ்ஸைவிட்டு இறங்கிய சிலர், சிறுநீர் கழிப்பதற்காக சாலையோரம் ஒதுங்கினார்கள். அங்கு கையில் தடி வைத்திருந்த ஒருவர், ‘யாருப்பா அது? இங்கெல்லாம் யூரின் போகக்கூடாது’ என்று அதட்டினார். அதைக் கண்டுகொள்ளாமல் கடமையாற்றிய சிலர்மீது அந்த நபர் டார்ச் வெளிச்சத்தைப் பாய்ச்சினார். அங்கிருந்த ‘நவீன கழிப்பறை’க்குச் சென்றோம். கழிப்பறைச் சுவரின் ஓட்டைகளில் வெளியேறிய சிறுநீர் ஒரு குளம்போல தேங்கியிருக்க, நான்கைந்து செங்கல் கற்களைப் போட்டிருந்தார்கள். பெரும் ரிஸ்க் எடுத்து கழிப்பறைக்குள் நுழைந்தால், நாற்றம் மூச்சுமுட்டியது. அடர் மஞ்சள் நிறத்தில் சிறுநீர் கறையைப் பார்த்ததும், தொற்றுநோய் வந்துவிடுமோ என்ற அச்சம் ஏற்பட்டது. வேறுவழியில்லை. அதற்கு, ஐந்து ரூபாய் வேறு.

அங்கிருந்த ஹோட்டலுக்குள் நுழைந்தோம். ‘என்னடா இது.. களவாணிப்பய ஓட்டலா இருக்கு’ – என்ற, அங்கு சாப்பிட்டுக்கொண்டிருந்த பயணிகளின் மைண்டு வாய்ஸ் கேட்டது. அங்கு சாப்பிட்ட அனுபவத்தை ஒரு சோகக் கதையாகவே எழுதலாம்.
தனியார் மோட்டல்களில் அரசுப் பேருந்துகள் நிறுத்தப்படுவது பற்றிய தகவல்களை, அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்திடம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேட்டோம். மழுப்பலான பதில்களே நமக்குக் கிடைத்தன. ‘அரசுப் போக்குவரத்துக்கழகப் பேருந்துகளை நிறுத்துவதற்குத் திறந்தவெளி ஒப்பந்தம் மூலமாக மோட்டல்கள் தேர்வுசெய்யப்படுகின்றன. பேருந்துகள் சென்று வெளியேறவும், நின்று செல்லவும் போதுமான இடவசதிகள் இருக்கவேண்டும். விற்கப்படும் உணவுகள் தரமாக இருக்கவேண்டும்…’ என்று பொத்தாம்பொதுவாக தகவல்களை வழங்கி கடமையை முடித்துக் கொண்டது அரசு. அந்தத் தகவல்களை எடுத்துக்கொண்டு களமிறங்கியது விகடன் டீம்.
மாமண்டூர் ‘மெர்சல்’!
சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மாமண்டூருக்கு அருகிலுள்ள அரசுக்குச் சொந்தமான ஒரு மோட்டலுக்குச் சென்றோம். அது, தனியாருக்கு கான்ட்ராக்ட் விடப்பட்டுள்ளது. ஒரு கல்தோசை 50 ரூபாய். அது, நம் உள்ளங்கை அளவுக்குக் குட்டியாக இருந்தது.  “என்னண்ணே… தோசை குட்டியா இருக்கு… விலை இவ்வளவு அதிகமா இருக்கு?” என்று கல்லாவில் இருந்தவரிடம் கேட்டோம். “மாசமானா மூணு லட்ச ரூபா கட்டணுமில்ல…” என்று கடுப்பாக பதில் சொன்னார். ஓட்டுநர்கள், நடத்துநர்களுக்குத் தனி உபசரிப்பு நடந்து கொண்டிருந்தது. சாப்பிட்டு முடித்த ஓர் ஓட்டுநரிடம், “என்ன சார்… உங்களுக்குத் தனிக் கவனிப்பா?” என்றோம்.
“அட ஏங்க… வாயில வைக்க முடியல. இன்னும் நாலஞ்சு மணிநேரத்துக்குக் கண்விழிச்சி வண்டி ஓட்டணுமே… அதுக்காக எதையாவது உள்ளே தள்ளணும்ல” என்றார். டீ வாங்கி அருந்தினோம். சுடுநீரில் சர்க்கரை கலந்துகொடுத்ததுபோல இருந்தது. கழிப்பறை பராமரிக்கப்படவே இல்லை. கால் வைக்கவே கூசியது. உள்ளே போனால், நிறைய மது பாட்டில்கள் கிடந்தன.

விக்கிரவாண்டி விபரீதங்கள்!

விக்கிரவாண்டி அருகேயுள்ள மோட்டலில் ஜெயலலிதா படத்துடன் ‘ஜெ.கிளாசிக்’ என்று பெயர்ப் பலகை வைக்கப்பட்டிருந்தது. அங்கிருந்த பெட்டிக்கடையில் பிஸ்கட் பாக்கெட் வாங்கினோம். எம்.ஆர்.பி விலையைவிட ஐந்து ரூபாய் அதிகம். “கவரில் உள்ள எம்.ஆர்.பி விலையை மட்டுமே தருவோம்” என்று  நாம் சொன்னோம். “நாங்க சொல்றதுதான் விலை” என்றார் கடைக்காரர். ‘‘அதெல்லாம் முடியாது’’ என்று நாம் உறுதியாகச் சொல்ல… ஆங்காங்கே நின்றிருந்த மோட்டல் ஊழியர்கள் நம்மைச் சூழ்ந்தனர். “நாங்க வெச்சதுதான் விலை. வேணும்னா வாங்கு… இல்லேன்னா வேலையைப் பாத்துக்கிட்டுப் போ” என்றார்கள். “நாங்க கம்ப்ளைன்ட் செய்வோம்” என்றோம். “யார்கிட்ட வேணாலும் கம்ப்ளைன்ட் பண்ணு. எல்லாருக்கும் குடுக்க வேண்டியதை குடுத்துட்டுத்தான் நடத்துறோம்” என்றார்கள்.
காபி வாங்கினோம். வாயில் வைக்கமுடியவில்லை. “ஒரு காபி இருபது ரூபாய்க்கு விக்கிறீங்க. கொஞ்சம் தரமா குடுக்கலாம்ல…” என்றோம். “பவுடர் பால்ல போட்டா அப்படித்தான் இருக்கும். குடிச்சிட்டுக் கிளம்பு… வந்துட்டானுங்க” என்று குரலை உயர்த்தினார் கடைக்காரர். அடுத்து, உணவகத்துக்குள் நுழைந்தோம். நான்கைந்து சர்வர்கள் நம்மைச் சூழ்ந்தார்கள் (எல்லாம் டிப்ஸ்க்காக). ஒரு தோசை ஆர்டர் செய்தோம். ஒரே புளிப்பு. சர்வரைக் கூப்பிட்டு, “தோசை பயங்கரமா புளிக்குது” என்றோம். “புது மாவுதான்… நல்லாத்தான் இருக்கும்… சாப்புடு” என்று நம்மை அவர் முறைத்தார். தோசையை அப்படியே வைத்துவிட்டு, கல்லாவில் இருந்தவரிடம் சென்று விஷயத்தைச் சொன்னோம். உடனே அவர், கிச்சனுக்குள் சென்றுவிட்டுத் திரும்பினார். அவருடைய முகம் கடுமையாக மாறியிருந்தது. “ராத்திரி 12 மணிக்கு இந்த மாதிரி தோசை கிடைக்கிறதே பெரிய விஷயம்… நான் சாப்பிட்டு பார்த்துட்டேன்… நல்லாத்தான் இருக்கு… 50 ரூபாயைக் குடுத்துட்டுக் கிளம்புங்க” என்றார். “என்னது அம்பது ரூபாயா? விலைப்பட்டியல்ல தோசை 30 ரூபாய்னு போட்டிருக்கே” என்றோம். “உங்களுக்குக் கொடுத்தது ரோஸ்ட். 50 ரூபா” என்றார். “இப்படி அநியாயமா கொள்ளையடிக்கிறீங்களே.. இது நியாயமா?” என்றோம். “இன்னா பண்ணுவே… கம்ப்ளைன்ட் பண்ணுவியா… யார்கிட்ட வேணும்னாலும் சொல்லிக்கோ” என்று அலட்சியமாகக் கூறினார்.
எதிரில் இருந்த இன்னொரு ஜெ.கிளாசிக் மோட்டலுக்குச் சென்றோம். மோட்டலில் நிறுத்தாமல் செல்லும் அரசுப் பேருந்துகளைக் கணக்கெடுத்துக்கொண்டிருந்தார் ஒருவர். மோட்டலின் முகப்பில் நான்கு முரட்டு ஆசாமிகள் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். உணவகத்துக்குள் சென்று அமர்ந்தோம். அங்கும் அதே அனுபவம்தான். ஊசிப்போன வடைகளை வைத்திருந்தார்கள். அதுபற்றி கேள்வி கேட்டதால் சண்டைக்கு வந்தார்கள் கடைக்காரர்கள்.
தனியாக ஒதுக்கப்பட்டிருந்த இடத்தில் சாப்பிட்டுவிட்டு கல்லாவுக்கு வரும் டிரைவர், கண்டக்டர்கள், அங்கிருக்கும் நோட்டில் கையெழுத்துப் போடுகிறார்கள். கண்டக்டர் தன்னிடம் உள்ள ஒரு நோட்டில் கல்லாவில் இருப்பவரிடம் கையெழுத்துப் பெற்று, சீல் வாங்கிக்கொள்கிறார். வெளியில் வந்து புகைபிடித்துக்கொண்டிருந்த ஒரு டிரைவரிடம், “ஏன் சார் இந்த மாதிரி ஹோட்டல்கள்ல நிறுத்திக் கஷ்டப்படுத்துறீங்க?” என்று பேச்சுக் கொடுத்தோம். “எங்களுக்கென்ன ஆசையா? வண்டியைக் கிளப்பும்போதே, இந்த மோட்டல்லதான் நிறுத்தணும்னு அதிகாரிங்க சொல்லியனுப்புறாங்க. இவனுங்ககிட்டே சீல் வாங்கிட்டுப் போகலன்னா, அதிகாரிங்க மெமோவே கொடுத்துருவாங்க” என்றார், ஆதங்கத்துடன்.

 

ஒரு பேருந்துக்கு 75 ரூபாய்!
மோட்டல் முறைகேடுகள் குறித்து, அரசு விரைவுப்போக்குவரத்துக்கழக ஊழியர்கள் சங்க (சி.ஐ.டி.யு) பொதுச்செயலாளர் நடராஜனிடம் கேட்டோம். “தினமும் 16 ஆயிரம் பஸ்கள் மோட்டல்களில் நின்று செல்கின்றன. டெண்டர் முறையில் மோட்டல்களுக்கான ஒப்பந்தங்கள் கோரப்படுகின்றன. ஒரு பஸ்ஸுக்கு 75 ரூபாய் வீதம் மோட்டல் உரிமையாளர் தரவேண்டும். 2011-ம் ஆண்டுக்கு முன்புவரை ஓட்டுநர், நடத்துநருக்கு இலவச உணவு, மிட்டாய்கள் கொடுத்துப் பஸ்களை நிற்கச் சொல்வார்கள். அதன்பிறகு போக்குவரத்துக் கழகமே டெண்டர்விட ஆரம்பித்தது. உணவின் தரம் குறித்து உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை நடத்துவதாகச் சொல்வார்கள். அது, கண்துடைப்பாகவே நடக்கிறது. இதுகுறித்து நிர்வாகத்துக்குக் கடிதம் எழுதியிருக்கிறோம்” என்றார்.
அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர்கள் சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் ஆறுமுக நயினார், “சில மோட்டல்களில், சிக்கன் பிரியாணி என்ற பெயரில் காக்கா கறி பிரியாணி விற்கப்படுவதாக புகார் வந்துள்ளது. எண்ணெய் உட்பட தரமற்ற உணவுப்பொருள்களையே பயன்படுத்துகிறார்கள். போக்குவரத்துத் துறையும், உணவுப் பாதுகாப்புத் துறையும் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்றார்.
“இவ்வளவு தவறுகள் நடக்கின்றன. என்னதான் செய்கிறீர்கள்?” என்று விழுப்புரம் மாவட்ட உணவுப் பாதுகாப்பு அலுவலர் ஒருவரிடம் கேட்டோம். “அவ்வப்போது சோதனை செய்கிறோம். தரமற்ற உணவு எனக் கண்டுபிடித்துவிட்டால், அதற்கான அபராதத்தைக் கட்டிவிட்டு, மீண்டும் அதே தவறைச் செய்கிறார்கள்” என்று அலுத்துக்கொண்டவர், “அங்கு, உணவு தரமற்றதாக இருந்தால் 9444042322 என்ற வாட்ஸ்அப் எண்ணில் புகார் தெரிவிக்கலாம்” என்றார்.
தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் டேவிதாரைத் தொடர்புகொண்டு, “மோட்டல்கள் பிரச்னை பற்றிப் பேசவேண்டும்” என்று சொன்னவுடனே, “அதெல்லாம் போக்குவரத்துக் கழகத்தின்கீழ் வராது” எனச் சொல்லி தொடர்பைத் துண்டிக்க முயன்றார். “மோட்டல்கள் போக்குவரத்துறையின் கீழ்தான் வருகின்றன” என்று நாம் விளக்கியதும், “சரி, என்ன பிரச்னை என்று சொல்லுங்கள்…” என்றார். அனுபவங்களை விவரித்தோம். “நீங்கள் சொல்லும் தகவல்கள் புதிதாக இருக்கின்றன. இதுவரை யாரும் என்னிடம் சொல்லவில்லை. விசாரணை செய்துவிட்டுச் சொல்கிறேன். நீங்கள் கண்டறிந்த விஷயங்களை எழுதிக்கொள்ளுங்கள்” என்றார்.
போக்குவரத்துத் துறை அமைச்சர்  எம்.ஆர்.விஜயபாஸ்கர், நாம் சொன்னதைக் கேட்டுவிட்டு, “இப்போதுதான் சொல்லியிருக்கீங்க. இதுகுறித்து குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிடுகிறோம்” என்று முடித்துக்கொண்டார்.

ஓஹோ… இப்பதான் இதெல்லாம் உங்களுக்குத் தெரியுமா?

This entry was posted in News & Events. Bookmark the permalink.