வடையில் இருந்த ‘பல்லி’யால் மக்கள் அதிர்ச்சி உணவு பாதுகாப்பு துறையினர் ஆய்வு

ஏரல், நவ. 2: முக்காணி ஜெயராமச்சந்திராபுரத்தை சேர்ந்தவர் முனியராஜ்(32). இவரது மனைவி சந்தனமாரி(27). இவர் நேற்று முன்தினம் காலை உடல் பரிசோதனைக்காக ஏரல் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனை செல்வதற்காக முக்காணியில் இருந்து தனது மகள் ராஜலெட்சுமியுடன்(1) ஏரல் பஸ்சில் வந்துள்ளார். ஏரல் பஸ் நிலையம் அருகில் உள்ள ஒரு டீ கடையில் மகள் ராஜலெட்சுமிக்கு உளுந்த வடை வாங்கி கொடுத்துள்ளார். அப்போது அந்த வடையில் ஒரு பல்லி இருந்துள்ளதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.
வடையில் பல்லி இருப்பதை பார்த்த பொதுமக்கள் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து ஸ்ரீவைகுண்டம் ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் டைட்டஸ், உணவு பாதுகாப்பு மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் தங்கவிக்னேஷ் வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.  மேலும் வடை வாங்கியதாக கூறப்படும் பஸ் நிலையம் அருகில் உள்ள கடைக்கு சென்று அங்கிருந்த ரூ.490 மதிப்புள்ள வடைகளை கைப்பற்றி அழித்தனர். மேலும் கடையை சுத்தமாகவும், சுகாதாரமாகவும், உணவு பண்டங்களை பாதுகாப்பாகவும் வைக்க அறிவுரை வழங்கினர். அதுவரை தற்காலிகமாக அந்த கடையை மூட உத்தரவிட்டு சென்றனர். இதையடுத்து அந்த கடை உரிமையாளர் கடையை சுத்தம் செய்து, கடைக்கு பெயின்ட் செய்து வருகிறார்.

This entry was posted in News & Events. Bookmark the permalink.